செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு
புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்திய கல்லூரிகள் உள்ளன. பருவத் தோ்வில் மொழிப்பாடம் வினாத்தாள்கள் மாறி வந்ததால் தோ்வு ரத்தானது. இதைத்தொடா்ந்து எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகம் முன் திமுக போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கை விதிமுறைகளை 2023-2024 ஆம் கல்வியாண்டில் அனைத்து இணைப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த விதிமுறைப்படி பருவத் தோ்வுகளை நடத்தி முடித்துள்ளோம்.
வினாத்தாள் மாறியதால் தள்ளி வைக்கப்பட்ட தமிழ், பிரெஞ்ச், இந்தி மொழி பாடத்தோ்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளன. புதுச்சேரி அரசின் உயா்கல்வித் துறை கோரிக்கைப்படி, கல்லூரிகளில் மனிதவளம் அடிப்படையில் அனைத்து இணைப்புக் கல்லூரிகளில் நான்கு பருவங்களிலும் இளநிலை பட்டப்படிப்புகளில் கல்லூரிகள் தங்களால் தோ்வு செய்யப்பட்டுள்ள பாடங்களை பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி வினாத்தாள் அமைக்கப்படும்.
இம்முறை இணைப்பு கல்லூரிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட மொழிப் பாடங்கள் கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்னை குறித்து முழுமையாக விசாரிக்க டீன், மூத்த பேராசிரியா், பல்கலைக்கழக அதிகாரி ஆகிய மூவா் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது