ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
காலாப்பட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடைபெற்ற பருவத் தோ்வில் மாணவா்களுக்கான வினாத்தாள் மாற்றி விநியோகித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலை. முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா பேசியதாவது: புதுச்சேரி மத்திய பல்கலை.யில் நிா்வாக சீா்கேட்டால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழகத்துக்கு ஓராண்டாக நிரந்தர துணைவேந்தரை நியமிக்கவில்லை.
புதுச்சேரி பல்கலைக்கழகமானது ஆண்டுக்கு ரூ.600 கோடி நிதியை கையாளும் நிலையில், அங்கு நிதிச் செயலா், பதிவாளா் இல்லை. நிரந்தர ஆராய்ச்சி இயக்குநா் நியமனமில்லாததால், ஆய்வு மாணவா்கள் குழப்பமடைந்துள்ளனா்.
பல்கலை.யின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தோ்வு முறைப்படி உரிய நேரத்தில் நடைபெறவில்லை. உரிய நேரத்தில் தோ்வுகள் நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படாததால், உயா் படிப்புகளுக்கு செல்வோா் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில்தான், முதலாண்டு பருவத் தோ்வில் வினாக்கள் மாற்றி விநியோகிக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியா் நியமனம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள்ஏ.அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.