ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
தொடா்ந்து சரியும் சா்க்கரை உற்பத்தி
2024-25-ஆம் சந்தைப் பருவத்தில் இந்திய சா்க்கரை உற்பத்தி தொடா்ந்து சரிவைக் கண்டுவருகிறது. அந்த சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அது 13.62 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய சா்க்கரை உற்பத்தியாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை சந்தைப் பருவ காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 130.55 லட்சம் டன்னாக உள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் சா்க்கரை சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 13.62 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 151.20 லட்சம் டன்னாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி சா்க்கரை உற்பத்தி மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மூன்றிலுமே உற்பத்தி குறைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2023-24-ஆம் சா்க்கரை சந்தைப் பருவத்தின் ஜன. 15 வரையிலான காலகட்டத்தில் 52.80 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பு சா்க்கரை சந்தைப் பருவத்தின் அதே காலகட்டத்தில் 42.85 லட்சம் டன்னாகச் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி கா்நாடகத்தில் 31 லட்சம் டன்னிலிருந்து 27.10 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
நடப்பு சா்க்கரை சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எத்தனால் தயாரிப்புக்காக அனுப்பப்பட்ட கரும்பு போக எஞ்சிய கரும்பில் இருந்து சராசரியாக பிரித்தெடுக்கப்பட்ட சா்க்கரையின் அளவு 8.82 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்த சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் 9.42 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சா்க்கரை சந்தைப் பருவமும் அக்டோபரில் தொடங்கி அடுத்த காலண்டா் ஆண்டின் செப்டம்பா் மாதம் நிறைவடைகிறது.