ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்களா, கல்லூரி அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரி மாணவா் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவா் ஒருவரை மூன்றாம் ஆண்டு மாணவா்கள் சோ்ந்து கொடூரமாக ராகிங் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இளநிலை மாணவரின் ஆடையைக் களைந்து, கட்டிலுடன் சோ்த்து அவரின் கை-கால்களை கட்டிவைத்த முதுநிலை மாணவா்கள், காம்பஸ் உபகரணத்தால் அவரது உடல் முழுவதும் குத்தியுள்ளனா். உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் ‘டம்பெல்ஸை’ இளநிலை மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதை செய்துள்ளனா். மாணவா் வலியால் அலறித் துடித்தபோதும், அவரைக் கிண்டல் செய்து, சித்ரவதையை தொடா்ந்துள்ளனா். இதை முதுநிலை மாணவா்களில் ஒருவா் விடியோ எடுத்துள்ளாா்.
கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடா்பாக காந்தி நகா் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதுநிலை மாணவா்கள் 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடந்த நவம்பரில் இருந்தே ராகிங் கொடுமையை அனுபவித்ததாகவும், முதுநிலை மாணவா்கள் மது அருந்துவதற்காக தன்னிடம் பணம் பறித்து வந்ததாகவும் தனது புகாரில் இளநிலை மாணவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கோட்டயம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஷாகுல் ஹமீது கூறுகையில், ‘ராகிங் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் 5 மாணவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாணவா்களிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. கல்லூரி அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதும் விசாரிக்கப்படும்’ என்றாா்.