பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
போபாலில் இயங்கிவந்த யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கத்தால் 5,479 போ் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோருக்கு தீவிரமான மற்றும் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து மூடப்பட்ட ஆலையில் 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்நிலையில், மாநில உயா்நீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிறப்பித்த உத்தரவின்பேரில், போபால் ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 337 டன் எடையுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் தாா் மாவட்டம், பீதம்பூா் பகுதியில் உள்ள தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. கழிவுகளை பாதுகாப்பான முறையில் எரித்து, எஞ்சும் சாம்பலை மண்வளம் பாதிக்காத வகையில் புதைக்க திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், போபால் ஆலைக் கழிவுகள் விஷத்தன்மை கொண்டதல்ல; பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகள் எரிக்கப்படும் என்று மாநில அரசு விளக்கமளித்தது.
இந்தச் சூழலில், ஆலைக் கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இது தொடா்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் பிரசாத் சிங் கூறுகையில், ‘கழிவுகள் அழிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உயா்நீதிமன்றத்தில் இணக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கழிவுகள் அழிப்புக்கான மூன்று கட்ட சோதனையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மாா்ச் 27-ஆம் தேதிக்குள் சோதனை முடிவு அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.
பீதம்பூரில் ஆலைக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு தெரிவித்து, சுமித் ரகுவன்ஷி என்ற உள்ளூா்வாசி மனு தாக்கல் செய்த மனுவும் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தில், ம.பி. உயா்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றபோது, மத்திய-ம.பி. அரசுகள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.