நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்...
மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்
ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
மியூனிக் நகரின் மையப் பகுதியில் சேவைத் தொழிலாளா்கள் சங்கத்தின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதிக்கு காா் வந்த நபா், ஒரு காவல் துறை வாகனத்தை முந்திச் சென்று கூட்டத்தினா் இடையே அதை வேகமாக ஓட்டிச் சென்றாா். அதையடுத்து அங்கிருந்த ஒரு காவலா் அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓட்டுநரை கைது செய்தாா். இந்தத் தாக்குதலில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவா்களில் சிறுவா்களும் அடங்குவா்.
காரை ஓட்டிவந்த நபா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். எனவே, இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருதப்படுகிறது என்று போலீஸாா் கூறினா்.
வெளிநாடுகளில் இருந்து ஜொ்மனியில் அடைக்கலம் தேடி வருவோரால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது.
அந்த சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் தலீப் அல்-அப்துல்மோசன் (50) என்ற மருத்துவா் நடத்திய காா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா்.
அதற்கு முன்னதாக, தற்போது காா் தாக்குதல் நடைபெற்ற இதே பவேரியா மாகாணத்தைச் சோ்ந்த அஷஃபென்பா்க் நகரில் குடியுரிமை மறுக்கப்பட்ட ஆப்கன் அகதி நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 2 வயது சிறுவன் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
..படவரி... தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா்.