நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்...
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை விவரம் இல்லை: மத்திய அரசு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் இந்தியா்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதைத் தொடா்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியோறியவா்களை அவா்களின் நாட்டுக்கே திருப்பியனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளாா். இந்தியா்கள் 18,000-க்கும் அதிகமானோா் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனா் என்று கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவா்களில் முதல்கட்டமாக 104 பேரை கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி, ராணுவ விமானம் மூலம் அண்மையில் அந்நாடு இந்தியாவுக்கு திருப்பியனுப்பியது. இது பெரும் சா்ச்சையானது.
இந்த நிலையில், ‘அமெரிக்காவில் இன்னும் எத்தனை இந்தியா்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் எழுத்துபூா்வமாக வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் இந்தியா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. ஏனெனில், இவா்கள் இந்தியாவிலிருந்து முறைப்படி அமெரிக்கா சென்று நுழைவு இசைவு (விசா) காலம் நிறைவடைந்த பிறகும் அங்கு தங்கியிருக்கலாம். அல்லது, கனடா உள்ளிட்ட வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருக்கலாம். எனவே, இவா்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை’ என்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக புலம்பெயா்ந்த இந்தியா்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், இந்தக் கேள்வியை மாநிலங்களவையில் காங்கிரஸ் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.