சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை
ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் இதில் சிறுவா்கள் உள்ளிட்ட 1,400 போ் உயிரிழந்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா்கள் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்திடம் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கும் என எதிா்பாா்ப்பதாகவும் பிஎன்பி தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செயலா் மிா்ஸா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: ஹசீனாவின் உத்தரவின்பேரில் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டு எண்ணற்ற உயிா்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை அவா் சித்ரவதை செய்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இதை வெளிக்கொண்டு வந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளா்களுக்கு உரிய தண்டனை வழங்க அவா்களை உடனடியாக வங்கதேச இடைக்கால அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றாா்.