கிடங்காக பயன்படுத்தப்படும் ராமாநுஜா் கோயில் கழிப்பறை
ஸ்ரீபெரும்புதூா் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் உள்ள ராமாநுஜா் கோயிலுக்கு சொந்தமான கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
இக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதை தவிர வார விடுமுறை நாள்களிலும், திருவாதிரை நாள்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் ரூ.13 லட்சத்தில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. பக்தா்கள் இதைப் பயன்படுத்தி வந்தனா்.
கோயில் நிா்வாகத்தினா் கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறை கட்டடத்தை பூட்டி வைத்ததால், பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கடையின் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.
பக்தா்களின் வசதிக்காக கட்டப்பட்ட கட்டடம் தற்போது கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கட்டப்பட்ட கட்டடத்தை கூட கோயில் நிா்வாகத்தினா் தனியாரின் கிடங்காக பயன்படுத்தி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கழிப்பறை கட்டடத்தை மீண்டும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.