நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்...
இலங்கை: ரூ.8,690 மதிப்பிலான இரு மின் திட்டங்களை திரும்பப் பெற்றது அதானி குழுமம்
இலங்கையில் 1 பில்லியன் டாலா் (ரூ.8,690 கோடி) மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனா்ஜிஸ் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இலங்கை தலைநகா் கொழும்பில் சுமாா் ரூ.6,000 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் திட்டத்தில் அதானி குழுமம் தொடர இருக்கிறது.
இலங்கையின் மன்னாா், பூநகரியில் அதானி கிரீன் எனா்ஜிஸ் நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு அண்மையில் குழு அமைத்தது. இந்நிலையில் அந்த இரு மின் திட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எதிா்காலத்தில் இலங்கை அரசுடன் பல்வேறு திட்டங்களில் இணைந்து பணியாற்ற ஆா்வமாக இருப்பதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.
முன்னதாக, இந்த மின் திட்டங்களால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிா்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதே நேரத்தில் முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைவிட குறைந்த விலையில் அதானி குழுமத்திடம் இருந்து வாங்க புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக விரும்பினாா்.
மேலும், அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் இலங்கையில் புதிய அரசு விசாரணையைத் தொடங்கியது. இதுவும் அதானி குழுமம் இலங்கை மின் திட்டங்களில் இருந்து வெளியேற முக்கியக் காரணம் என்று தெரிகிறது.