கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்
பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவா் கூறினாா்.
உள்நாட்டில் விலை அதிகரிக்காமல் தடுப்பது, தேவையை முழுமையாக நிறைவு செய்வது போன்ற காரணங்களுக்காக துவரை உள்ளிட்ட சில பருப்பு வகைகளின் இறக்குமதி வரியை கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு ரத்து செய்தது. இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டு வரும் பிப்வரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பருப்பு வகைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. இது தொடா்பாக உணவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்படும். உள்நாட்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூா் பருப்பு விளைச்சல் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
அதன் பிறகு அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் அமைச்சா்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
2027-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு கிலோ பருப்பு கூட இறக்குமதி செய்யும் தேவை இருக்காது.
பருப்பு சாகுபடி திடீரென குறைந்து விடுவது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதற்காக பல்வேறு நவீன சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன என்றாா்.