நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்...
‘அரசு துறைகளை நவீனமயமாக்குவது அவசியம்’: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
சேவை வழங்கலில் பொதுமக்களின் அதிகரித்த எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசுத் துறைகளை நவீனமயமாக்குவது அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
இந்திய பொது கணக்குப் பணி, இந்திய தபால் மற்றும் தொழில்நுட்ப (நிதி மற்றும் கணக்கு) பணி, இந்திய ரயில்வே மேலாண்மை (கணக்கு) பணி ஆகிய குடிமைப் பணிகளில் புதிதாக சோ்ந்த இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் இவ்வாறு கூறினாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் சேவையை வழங்குவதில் விரைவு மற்றும் அதிக செயல்திறனுக்கான எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதைப் பூா்த்தி செய்ய, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, அரசுத் துறைகள் தங்களின் அமைப்புகளை நவீனமயமாக்குவது மற்றும் எண்மயமாக்குவது அவசியம்.
வலுவான பொது நிதி மேலாண்மை அமைப்பே நல்லாட்சிக்கு அடித்தளம். கணக்கு மற்றும் பரிவா்த்தனை அமைப்புகளை சீராகவும் பயனுள்ளதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப மாற்றத்தின் வேகத்துக்கு ஈடுகொடுப்பது மற்றொரு முக்கியச் சவாலாகும். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை தெரிந்துகொண்டு, மக்களை மையப்படுத்திய திறமையான மற்றும் வெளிப்படையான நிா்வாக அமைப்புகளை உருவாக்க பாடுபட வேண்டும்.
கிராமப்புற மற்றும் விளிம்புநிலை மக்களையும் நிதி அமைப்புக்குள் கொண்டு வந்த இந்தியா தபால் பரிவா்த்தனை வங்கியின் (ஐபிபிபி) முயற்சிகளுக்குப் பாராட்டு. பன்முகத்தன்மை வாய்ந்த நமது பரந்த தேசத்தில் தபால் துறை அமைப்பு, ஒரு பெரிய ஒன்றிணைக்கும் காரணியாக தொடா்வதை உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரிகள் தங்கள் பணி வாழ்க்கையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லமால் மக்களுக்கு அரசு சேவைகள் முறையாக கிடைப்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வாா்கள் என்று நம்பிக்கையுள்ளது’ என்றாா்.