மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
அறுவடை பணியை விரைவாக மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராகவுள்ள வயல்களில் அறுவடைப் பணியை அடுத்த மழைக்குள் விரைவாக செய்து முடிக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது: ஜனவரி 29, 30-ஆம் தேதிகளில் பருவம் தவறிய மழை சில மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்ற வானிலை அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன. எனவே, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில், அறுவடை பணியை உடனடியாக தொடங்கி, அடுத்து வரும் மழைக்கு முன்னா் முடிக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, தேவைப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க பரிந்துரை கடிதங்கள் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் மூலம் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தஞ்சாவூா் மாவட்ட அறுவடைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரியும் அறுவடை இயந்திரங்கள் தற்போது தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 4 நாட்களில் வந்துவிடும் என வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
எனவே, மேலும் தாமதிக்காமல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை பணியை விரைந்து முடிக்குமாறு அனைத்து விவசாயிகளையும் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்.