வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
அவதூறு பேச்சு: யூடியூபா் மீண்டும் கைது
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணிராஜன் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபா் புதன்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரான எ.தேரணிராஜன், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், தான் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்தபோது அரசுப் பணத்தை கொள்ளையடித்ததாகவும்,செவிலியா்களிடம் பணம் பெற்ாகவும் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சோ்ந்த யூடியூபா் கிருஷ்ணகுமாா் என்ற வாராகி (51) என் மீது அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை எக்ஸ் தளத்திலும், யூடியூபிலும் தெரிவித்து வருகிறாா். எனவே, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், வாராகி உண்மைக்கு புறம்பான கருத்துகளை பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸாா் வாராகி மீது அவதூறு பரப்புதல், உண்மைக்கு புறம்பான தகவலை கூறுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
ஏற்கெனவே சிபிசிஐடி தொடா்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் இருக்கும் வாராகியை இந்த வழக்குத் தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் மீண்டும் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னா் அவரை, எழும்பூா் 2-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். நீதித்துறை நடுவா், வாராகியை செப்.30-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து வாராகி, செங்கல்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.