ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய...
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
நமது நிருபர்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப்பட்ட குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மேலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள், மணியம் (பணியாளர்) உள்ளிட்டோரை அதற்குரிய பாரம்பரிய நடைமுறைகளின்படி நியமிக்கவும் உத்தரவிட்டது.
ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களை அர்ச்சர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாசாரியர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களில் தொன்றுதொட்டுப் பணி செய்துவரும் சிவாசாரியர்கள், பட்டர்கள், குருக்கள், ஆதி சைவர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவும் தமிழக அறநிலையத் துறையின் அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியது. வேறு சில அமைப்புகளும் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கை 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை "அதேநிலை தொடர வேண்டும்' என உத்தரவிட்டது. இதற்கிடையே ஆகம முறைப்படி நடத்தப்படும் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள், மணியம் மற்றும் சிப்பந்திகளை நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் யானை எஸ்.ராஜேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். முந்தைய நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பின்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்குரைஞர் யானை எஸ். ராஜேந்திரன் ஆஜராகி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 குருக்களும், 3 மணியமும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 2 குருக்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பூஜை, புனஸ்காரத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குருக்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார். ரிட் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் குருகிருஷ்ண குமார், பி.வள்ளியப்பன் ஆகியோர் ஆஜராகி, "ஆகம கோயில்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க ஆட்சேபம் இல்லை' என்றனர்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, அதன் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர், "பயிற்சி அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதைக் கூட மனுதாரர்கள் எதிர்க்கின்றனர். ஆகம கோயில்களும் மிகவும் முக்கியமானவைதான். அதற்காக கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதனால், ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க அனுமதிக்கலாம்' என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் ஆகமக் கோயில்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையிலான குழு மூன்று மாதங்களில் அக்கோயில்களைக் கண்டறிய வேண்டும். ஆகமக் கோயில் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும். ஆகமம் அல்லாத கோயில்களில் பணியிடங்களை அரசு நிரப்பலாம்' எனத் தெரிவித்தனர்.
இதேபோல, ராமேசுவரம் கோயிலில் குருக்கள் உள்ளிட்ட பணியிடங்களை அதன் மரபு, பாரம்பரிய நடைமுறைப்படி நியமிக்க அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு அடுத்த விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.