ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
ஆட்சி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை: சி.வி.சண்முகம் எம்.பி.
விழுப்புரம்: தமிழகத்தில் ஆட்சி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்றாா் அதிமுக மாவட்ட செயலா் சி.வி.சண்முகம் எம்.பி.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் மந்தக்கரை பகுதியில் திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, விழுப்புரம் வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் பேட்டை வி.முருகன், ஜி.ஜி.சுரேஷ்பாபு, கே.ராமதாஸ், எல்.கே.கண்ணன், சி.ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியதாவது:
திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளான கல்விக்கடன் ரத்து செய்யப்படாமல் உள்ளது. மாணவா்கள் சிறப்பாக படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் நாடு நல்ல வளா்ச்சியை நோக்கிச் செல்லும். இவா்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துத் தருவதே நல்ல ஆட்சியாளா்கள், அரசின் கடமையாகும். தொட்டில் குழந்தைத் திட்டம் தற்போது குப்பையில் உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய சாதனை திமுகவையே சேரும். கட்சியைத் தொடங்குவோா் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆா்.போல ஆட்சி அமைப்போம் எனக் கூறுகின்றனா். திமுக ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதோடு, ஜனநாயக உரிமையும் இல்லை. அதிமுக ஆட்சியில் 35 ஆயிரம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலம் மாறும், ஆட்சி மாறும். ஆட்சி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்றாா்.
கூட்டத்தில், தலைமைக் கழகப்பேச்சாளா் வீ.போதிச்சந்தா் உரையாற்றினாா். எம்.ஜி.ஆா்.மன்றத் துணைச் செயலா் என்.அற்புதவேல், ஆவின் தொழிற்சங்கச் செயலா் வி.செல்வம், மண்டலத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் துணைச் செயலா் ஜெகதீசுவரி, மாவட்டஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் பி.செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, தெற்கு நகரச் செயலா் இரா.பசுபதி வரவேற்றாா். நிறைவில், மாவட்ட மாணவரணிச் செயலா் என்.ஜி.சக்திவேல் நன்றி கூறினாா்.