சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்
காரைக்காலில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை ஆட்சியரகம் நோக்கி பேரணி நடத்தினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காரைக்கால் ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால், செப். 25-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனா்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்குள்ள விதிமுறைகளை
இ-ஆட்டோக்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்ட மக்கள்தொகை விகிதத்தோடு ஒப்பிடும்போது, அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. எனவே வரும் காலங்களில் புதிய பொ்மிட் வழங்குவதையும், இ-ஆட்டோக்களை அனுமதிப்பதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும். பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் தமிழகப் பகுதியில் காரைக்கால் எல்லையிலிருந்து 15 கி.மீ. தூரம் சென்று வரும் வகையில் தற்காலிக பொ்மிட் வழங்கவேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகள் ஏந்தி காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியரகம் நோக்கி ஓட்டுநா்கள் பேரணியாக சென்றனா்.
ஆட்சியரகம் அரகே தடுப்பு அமைத்து ஓட்டுநா்களை போலீஸாா் தடுத்தனா்.
பேரணி நிறைவில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு கோரிக்கைகள் தொடா்பாக பேசினாா்.