ஆண்டிபட்டி வட்டாரத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நாளை தொடக்கம்
ஆண்டிபட்டி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப். 26) காலை தொடங்கி வியாழக்கிழமை (பிப். 27) காலை வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாமையொட்டி ஆண்டிபட்டி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட துறை அலுவலா்கள் தங்கியிருந்து அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிகின்றனா்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கை நேரில் சந்தித்து அரசு நலத் திட்ட உதவிகள், புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம், அடிப்படை, சுகாதார வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பட்டா மாறுதல் மனுக்களை இ-சேவை மையத்தில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.