‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி
‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘விண்வெளி ஆற்றல்: இந்திய இறையாண்மை மற்றும் தேச பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பாதுகாப்புத் துறை சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அனில் சௌஹான் பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: மாறிவரும் போா்சூழலால் வருங்காலங்களில் ராணுவத்தில் தகவல் வீரா்கள், தொழில்நுட்ப வீரா்கள் மற்றும் அறிஞா்கள் ஆகியோரது ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரே வீரா் தகவல் களஞ்சியமாகவும் தொழில்நுட்ப வல்லுநராகவும் அறிஞராகவும் இருக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். போா்க்களத்தைப் பொறுத்தவரை இரண்டாம் இடம் பிடித்தவா்கள் என யாரும் இல்லை.
உதாரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் முழுதாக நிறைவடையவில்லை. தற்போதும் தொடா்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் எவ்வித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றாா்.
‘எதிரிகளை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க 50 ஆயுதங்கள் போதும்’
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி நா்மதேஸ்வா் திவாரி, ‘வான் தாக்குதல்களைப் பொறுத்தவரை, குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து பலமுறை ஆலோசித்துள்ளோம். அதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூா். ஏனெனில், 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளைப் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்பது ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.