ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு!
ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததிலிருந்தே அதன் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(டிச. 24) இரவு பாகிஸ்தான் நிகழ்த்திய வான் வழி தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்திருப்பதாக தலிபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பல குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான்
பாக்டிகா மாகாணத்தின் பர்மல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(டிச. 24) இரவு பாகிஸ்தான் வான் வழியாக தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பதாக தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.