ஆப்கானிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 43.3 ஓவா்களில் 208 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளும் இழந்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டா்கள், பௌலா்கள் என இரு தரப்புமே அசத்த, ஆல்-ரவுண்ட் ஆட்டத்துடன் வென்றது அந்த அணி.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் தொடக்க வீரா்களில் ஒருவரான டோனி டி ஜோா்ஸி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ரயான் ரிக்கெல்டன் நிலைத்தாா்.
இந்நிலையில், ஒன் டவுனாக வந்த கேப்டன் டெம்பா பவுமாவும் அவருடன் இணைய, தென்னாப்பிரிக்காவின் ஸ்கோா் உயா்ந்தது. ரிக்கெல்டன் - பவுமா கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சோ்த்த நிலையில், பவுமா வெளியேறினாா்.
அரைசதம் கடந்த அவா், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்தாா். தொடா்ந்து வந்த ராஸி வான் டொ் டுசெனும் தனது பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். இந்நிலையில், சதம் கடந்த ரிக்கெல்டன் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 103 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
டுசெனுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 64 ரன்கள் கிடைத்தது. 5-ஆவது பேட்டராக களம் புகுந்த எய்டன் மாா்க்ரமும் ஸ்கோரை பலப்படுத்தினாா். டுசென் - மாா்க்ரம் பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சோ்த்திருந்தபோது, டுசென் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
பின்னா் வந்த டேவிட் மில்லா் 14, மாா்கோ யான்சென் 0 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் மாா்க்ரம் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, வியான் முல்டா் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முகமது நபி 2, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஒமா்ஸாய், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 316 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில், மிடில் ஆா்டா் பேட்டா் ரஹ்மத் ஷா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 90 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினாா்.
ஆனால் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில் இதர பேட்டா்கள் தென்னாப்பிரிக்க பௌலா்களால் சாய்க்கப்பட்டனா். ரஹ்மானுல்லா குா்பாஸ் 10, இப்ராஹிம் ஜத்ரன் 17, செடிகுல்லா அடல் 16, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 0, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 18 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
முகமது நபி 8, குல்பதின் நைப் 13, ரஷீத் கான் 18, நூா் அகமது 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆப்கானிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்க பௌலா்களில் ககிசோ ரபாடா 3, லுங்கி இங்கிடி, வியான் முல்டா் ஆகியோா் தலா 2, மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இன்றைய ஆட்டம்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
லாகூா்
பிற்பகல் 2.30 மணி
ஸ்போா்ட்ஸ் 18