ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!
ஆம்பூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில நாளகளுக்கு முன்பு அந்த நிலத்தில் உள்ள கிணற்றில் வேலை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த அஸ்கர் பாஷா (38) என்பவர், அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து உமர் ஆபாத் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் , பிரேதப் பரிசோதனைக்குப் பின் அஸ்கர் பாஷா கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அந்த நிலத்தில் வேலை செய்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் மாயமானதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அவர்களைப் பிடிக்க உத்தரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றனர்.
அங்கு தலைமறைவாக இருந்த உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத்தை அடுத்த பிரயக்ராஜை சேர்ந்த லால்ஜிசுனே மகன் அனில்குமார் (25) மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.