‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!
கத்தார் மீது தாக்குதல்: ஒன்றுதிரண்ட இஸ்லாமிய நாடுகள்; NATO போன்ற ராணுவ கூட்டமைப்பு உருவாகிறதா?
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - காசா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை, லெபனான், சிரியா, ஈரான், இராக், துனிஷா, ஏமன், கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு உதவுவதாகக் கூறி, தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
கத்தார் மீது தாக்குதல்; இஸ்லாமிய நாடுகள் மாநாடு
சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில், முன்னறிவிப்பில்லாமல் கத்தார் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
சௌதி அரேபியா, யு.ஏ.இ உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் செயலைக் கண்டித்திருந்தன.
இந்தநிலையில், கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் அவசர உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.
இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், இராக் பிரதமர் முகமது ஷியா-அல் சூடானி மற்றும் பாலத்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உட்பட பல உயர்மட்ட தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
ராணுவ கூட்டமைப்பில் ஆர்வம்
மாநாட்டுக்கு முன்னர், நேட்டோ போன்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதன்படி 22 அரபு லீக் நாடுகளும் சுழற்சிமுறையில் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்.

2015ம் ஆண்டு இதுபோன்ற ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. கத்தாரின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இனி வரும் நாட்களில் மத்தியகிழக்கில் கண்மூடித்தனமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியிருப்பதனால் இப்போது மீண்டும் இந்த திட்டம் பேசு பொருளாகியிருக்கிறது.
இராக், துருக்கி, எகிப்து உள்ளிட்ட பெரிய இஸ்லாமிய நாடுகல் புதிய ராணுவ கூட்டணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கத்தார் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கூட்டு பதிலடி அவசியம் எனக் கூறியுள்ளார் இராக் பிரதமர் முகமது ஷா-அல் சூடானி.
"எங்களின் சகோதரத்துவ மக்களான பாலத்தீனத்தின் மீது போர் தொடுத்து, அவர்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் இஸ்ரேல் எண்ணம் பலிக்காது" எனப் பேசியிருக்கிறார் கத்தார் பிரதமர்.
இதற்கு இடையே, இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, கத்தார் மீதான தாக்குதலைக் கண்டித்தார். ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்கா - இஸ்ரேலின் வலுவான உறவை பாதிக்காது என்றும் கூறினார்.

அரபு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நிலைக்குமா?
மத்தியகிழக்கில் இது போன்ற ராணுவ கூட்டணி இதற்கு முன்பும் இருந்திருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாக்தாத் ஒப்பந்தம் என அறியப்பட்ட Central Treaty Organisation என்ற ராணுவ கூட்டணி 1955 முதல் 1979 வரை நீடித்தது.
அரபு - இஸ்லாமிய நாடுகள் இடையே ஒரு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு நலன்கள் வேறுபட்டவை மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் கொள்கை முரண்களும் இதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளன.
"சௌதி அரேபியா - இரான் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முடியுமா? ராணுவ கூட்டமைப்பு உருவானால் உளவுத்துறை பகிர்வும் நடைபெறும்" எனக் கேள்வி எழுப்புகின்றனர் நிபுணர்கள்.
ஆனால், இரான் - சௌதி இடையே உறவை வலுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இஸ்லாமிய நாடுகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதனால், எகிப்து முன்மொழிந்துள்ள இந்த திட்டத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.
மாநாட்டின் தீர்மானங்கள் இன்று (செப்டம்பர் 16) அறிவிக்கப்படுகையில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.