உருவாகிறதா Gulf NATO படை? - Qatarல் Arab Countries முக்கிய முடிவு | Decode
Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!
பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் Jeeto Pakistan போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றி, பார்வையாளர்களின் இதயத்தில் இடம்பிடித்திருந்த இவர், அனைவராலும் அன்போடு நினைவுகூரப்பட்டார்.
பாகிஸ்தானின் குழந்தை பிரபலம்!
உமர் ஷாவின் குடும்பம் ஏற்கெனவே சோகத்தை சந்தித்திருந்தது. அவரின் பெரிய சகோதரர் அஹ்மத் ஷா, “Peeche Toh Dekho” என்ற பிரபல மீமின் மூலம் உலகளவில் அறியப்பட்டவர். மேலும், அவர்களது சிறிய சகோதரி ஐஷா, 2023 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உமர் ஷாவின் மரணம் அந்தக் குடும்பத்துக்கு இன்னொரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த நாளில், உமர் திடீரென வாந்தியெடுத்து, அந்த வாந்தி நுரையீரலுக்குள் சென்று சுவாச பாதைகளை பாதித்ததாகவும், இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து இதய நிறுத்தம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். இந்த சம்பவம், குடும்பத்தின் சொந்த ஊரான டேரா இஸ்மாயில் கானில் (Dera Ismail Khan) நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் இவரது மரணச் செய்தி வெளியானதும், பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். Jeeto Pakistan நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஃபஹாத் முஸ்தஃபா உட்பட பல பிரபலங்கள், இந்தச் சம்பவம் குறித்து “நம்ப முடியாதது”, “மிகவும் வேதனை தருகிறது” என்று பதிவு செய்துள்ளனர். நடிகர் வாசிம் பதாமி, மருத்துவர்களின் விளக்கத்தை பகிர்ந்து, “இது உண்மையில் தவிர்க்க முடியாத சோகமான நிகழ்வு” என்று குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த உமர் ஷாவின் திடீர் மரணம், ரசிகர்களிடையே வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சிறிய வயதிலேயே மக்களின் அன்பையும் கவனத்தையும் பெற்ற அவர், இனி நினைவாகவே வாழப்போகிறார்.