``முதுகுவலி காரணமாக விடுமுறை கேட்டவர் 10 நிமிடத்தில் மாரடைப்பால் மரணம்'' - ஊழியர்கள் அதிர்ச்சி
மனிதர்களுக்கு மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருப்பார்கள். திடீரென மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள்.
இப்போதெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், வயது குறைவானவர்களுக்கும் கூட மாரடைப்பு வருகிறது.
இது போன்ற ஒரு நிகழ்வை கே.வி ஐயர் என்பவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில்,
காலை 8.37 மணிக்கு எனது ஊழியர் சங்கர் தனக்குக் கடுமையான முதுகுவலி இருப்பதால் தன்னால் இன்று பணிக்கு வர முடியாது என்றும், தனக்கு விடுமுறை கொடுக்கும்படியும் கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
நானும் வழக்கமான மெசேஜ் என்று கருதி ஓகே என்று சொல்லி ஓய்வு எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
ஆனால் அன்று காலை 11 மணிக்கு எனக்கு வந்த போன் அழைப்பைக் கேட்டு நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.
போனில் பேசிய நபர் சங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். என்னால் நம்ப முடியவில்லை. உடனே மற்றொரு ஊழியருக்கு போன் செய்து அதனை உறுதிப்படுத்தினேன்.
சங்கர் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றபோது சங்கர் உயிரோடு இல்லை.
கடந்த 6 ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றி வந்தார். அவருக்கு 40 வயதுதான் ஆகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். மது அல்லது புகைப்பழக்கம் கூட கிடையாது.
சங்கருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு 8.37 மணிக்கு விடுமுறை கேட்டு மெசேஜ் செய்தவர் காலை 8.47 மணிக்கு இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

முழு சுயநினைவுடன் இருந்தவர் தனது இறுதி மூச்சுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்குச் செய்தி அனுப்பினார். நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
வாழ்க்கை எப்போதும் கணிக்க முடியாதது. உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள், ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது," என்று ஐயர் தனது பதிவை முடித்தார்.
சங்கரின் பதிவைப் பார்த்து பலரும் தங்களது கருத்துகளை எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.