வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்...
Vikatan Digital Awards: "26 வருஷம் போராடி நீதி வென்ற கிருஷ்ணம்மாளுக்கு சமர்ப்பிக்கிறேன்!" - புஹாரி
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 13 மாலை 4 மணியளவில் தொடங்கியது.

இதில், மண்ணையும் மனிதர்களையும் நேசித்து, கஷ்ட, நஷ்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் காட்சிப்படுத்தி பொது சமூகத்தின் முன் வைப்பதில் அசலான ஒரு முன்மாதிரியாகத் திகழும் புஹாரி ராஜாவுக்கு Best Impact Creator விருது வழங்கப்பட்டது.
விருதினை, விஜய் வரதராஜ் வழங்க புஹாரி ராஜா பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய புஹாரி ராஜா, "தூத்துக்குடியில் கிருஷ்ணம்மாள் என்பவரை நான் சந்திச்சேன். ஒரு 26 வருஷத்துக்கு முன்னாடி அந்த அம்மாவோட கணவரை போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிச்சு வெளுத்தங்க.
அந்த அம்மா `என் புருஷனை பார்க்கணும் விடுங்க-னு' சொன்னப்போ, `நாளைக்கு வெள்ள சேலை கட்டிட்டு வந்து பாரு-னு'ஸ்டேஷனில் சொன்னார்கள்.
மறுநாள் அந்த அம்மா தன் புருஷனோட பிணத்தைதான் பார்த்தாங்க. அவர் 26 வருஷம் சட்டப் போராட்டம் நடத்தி தன்னுடைய கணவரின் இறப்புக்கு காரணமான போலீஸ்காரரின் காக்கி சட்டையை கழற்ற வச்சிருக்காங்க.
31 வருஷம் சட்டப் போராட்டம் நடத்திய அற்புதம்மாளை நமக்கு தெரியும். அவரைப் போலவே 26 வருஷம் சட்ட போராட்டம் நடத்தி தனக்கான நீதியை வென்றெடுத்த கிருஷ்ணமாளுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.
இதுபோல அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, மறுக்கப்பட்ட நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஆயிரமாயிரம் கிருஷ்ணம்மாளுக்கும், ஆயிரமாயிரம் அற்புதம்மாளுக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன்.
என்னோட சேனல்ல பார்க்கிறவங்கதான் சேனலோட ரியல் ஹீரோஸ். நான் வரும் கருவி மட்டும் தான்.

முதல்முறையா நான் மதுரை தாண்டி சென்னைக்கு தான் வந்தேன். முதல் முதலாக 21 வயதில் ரயிலில் பயணம் செய்தேன்.
இந்த இரண்டையும் எனக்கு செய்து கொடுத்தது விகடன். 2007-08 விகடன் மாணவன் நான். நம்ம வாழ்க்கையில நாம எதைக் கத்துக்கணும், எதைக் கத்துக்க கூடாது என்பதை விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்துலதான் கத்துக்கிட்டேன்.
இந்த உலகத்துக்கு என்னை கைய பிடிச்சு கூட்டி வந்தது விகடன். நான் எந்த ஒரு வீடியோ பண்ணாலும், இதை விகடன் எப்படி அணுகும்னு பொருத்திப் பார்ப்பேன்.
நிறைய மீடியாக்கள் இருந்தாலும் விகடன் தனித்து நிற்பதற்கு காரணம் அதன் அறம். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதுதான் அறம்.
இன்னைக்கு நான் என்னோட மனசளவுல ஓரளவுக்கு மனுஷனா இருக்கிறேன்னா அதற்கு காரணம் இந்த பயணம் தான். விகடனுக்கு எப்போதும் நான் கடன்பட்டிருக்கிறேன். இந்த விருதை தாய் வீட்டு சீதனமாக நான் பார்க்கிறேன்" என்று நெகிழ்ந்தார்.