``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு
ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் பிரேசில் மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறார்.
ஆனால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு நாடான சீனா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை ட்ரம்ப். காரணம், அமெரிக்கா, சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை.

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் சீனா மீது வரி விதிப்பது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிபர் டொனால்டு ஜெ. ட்ரம்பால் நேட்டோ நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்:
அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதும், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டு, அவர்களும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போதும், நானும் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன்.
ஆனால், இன்னும் சில நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன.
இது அதிர்ச்சியாக இருக்கிறது. இது பேச்சுவார்த்தையைப் பெரிதும் மட்டுப்படுத்துகிறது.
நான் கூறியதை நீங்கள் செய்யும்போது, எப்படியும் நான் ரஷ்யா மீது தடை விதிக்க தயாராக இருக்கிறேன். அது எப்போது என்பதை மட்டும் சொல்லுங்கள்.

சீனா மீது வரி
இத்தோடு நேட்டோ ஒரு குழுவாக சீனா மீது 50 - 100 சதவிகித வரியை விதிக்க வேண்டும். இந்த வரிகளை ரஷ்யா - உக்ரைன் போர் முடிந்தவுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால், இந்த வரி அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பெரிதும் உதவும். சீனா ரஷ்யா மீது வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஆக, இந்த வரிகள் அந்தக் கட்டுப்பாட்டைத் தளரச் செய்யும். இது ஒன்று ட்ரம்ப் போர் கிடையாது. (நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கியிருக்காது. இது பைடன் மற்றும் ஜெலன்ஸ்கியின் போர்).
இத்தனை உயிர்கள்...
இந்தப் போரை நிறுத்த உதவ மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்... எனக்கு ஆயிரமாயிரம் ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்களின் உயிர்களை நான் காப்பாற்ற வேண்டும். (கடந்த வாரம், 7,118 பேர் உயிரிழந்திருக்கின்றனர்).
நான் கூறுவதைப் போல, நேட்டோ கூறினால், இந்தப் போர் விரைவில் முடிவடையும். உயிர்களும் காப்பாற்றப்படும்.
அப்படி செய்யவில்லை என்றால், என்னுடைய நேரம், ஆற்றல் மற்றும் அமெரிக்காவின் பணத்தை நீங்கள் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்". என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.