"முகவரியை மாற்றி மோசடி செய்திருக்கின்றனர்; பாமக-வின் தலைமை அலுவலகம் இனி தைலாபுரம...
பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களுடன் பேசிய சோலாப்பூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிரணிதி ஷிண்டே, நாடு அறிவிக்கப்படாத அவசரநிலையைக் கடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன. பத்திரிகைகள் தங்களது உரிமைகளை இழந்துவிட்டன. ஊடகங்கள் கோடி மீடியாவாக (மோடிக்கு ஆதரவாகச் செயல்படும் ஊடகங்களின் விமர்சனப் பெயர்) மாறிவிட்டன. விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராடுகின்றனர். ஆனால் அவர்களது குரல்கள் கேட்கப்படுவதில்லை.
ஒரு பக்கம் நாம் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறோம், இன்னொரு பக்கம் நாம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றோம். நமது விளையாட்டு வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், எதற்காக விளையாட வேண்டும்?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சோலாப்பூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிய அவர், அனைத்து வகையான விளைச்சல் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அரசு விரைந்து இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சோலாப்பூர் நகராட்சி ஊழலில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய அவர், கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!