பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா!
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் புது தில்லி, பெங்களூரு மற்றும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேபாளத்தில் நிலவும் வன்முறை சூழல் காரணமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்தவும், போட்டிகளை இணைந்து நடத்தவும் இலங்கையின் கொழும்பு நகரத்தை உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 11 முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை, புது தில்லி, பெங்களூரு மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 21 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமர்த்தனம் அறக்கட்டளை இணைந்து ஒருங்கிணைக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.
இதையும் படிக்க: சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!