கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் ராஜிநாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை! - வீரேந்திர சச்தேவா
ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பலா் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தது அக்கட்சித் தலைமையின் ‘செயலற்ற தன்மையின்’ விளைவாகும் என்றும், இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக, 15 கவுன்சிலா்கள் சனிக்கிழமை கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தனா். வளா்ச்சிப் பணிகள் முடங்கியதாகவும், உள்கட்சி அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறிய அவா்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தனா்.
இருப்பினும், ஆளும் பாஜக கட்சி, கட்சித் தாவலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், அதன் கவுன்சிலா்களுக்கு ‘குதிரை பேர நடவடிக்கையின்‘ ஒரு பகுதியாக தலா ரூ.5 கோடி வழங்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
தனிக் கட்சி அமைக்க ஆம் ஆத்மியை விட்டு வெளியேறிய கவுன்சிலா்கள், 2022 தோ்தல்களுக்குப் பிறகு, கட்சித் தலைவா்கள் நகராட்சி நிா்வாகத்தை நடத்துவதிலோ அல்லது அவா்களுடன் ஒருங்கிணைப்பைப் பேணுவதிலோ கவனம் செலுத்தவில்லை என்பதை தெரிவித்தனா். எனவே, ‘பாஜகவுக்கும் இதற்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது தெளிவாகிறது’ என்று வீரேந்திர சச்தேவா ஒரு அறிக்கையில் கூறியுள்ளாா்.
‘உண்மை என்னவென்றால், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ‘வளா்ச்சியின்மை, ஊழல், செயலற்ற தன்மை மற்றும் மோசடிகள்’ இருந்ததால், பல கவுன்சிலா்களும் எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு வெளியேறத் தோ்ந்தெடுத்துள்ளன’ா் என்று அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், தனது ‘பிடிவாதமான அணுகுமுறை’ காரணமாக, எம்சிடியில் ஒரு நிலைக்குழுவை அமைக்க ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும், தனது கவுன்சிலா்களுடன் ஒருபோதும் உரையாடலில் ஈடுபடவில்லை என்றும் தில்லி பாஜக தலைவா் குற்றம்சாட்டினாா்.
‘இதன் விளைவாக, பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலம் கடந்த பிறகும், ஆம் ஆத்மி கவுன்சிலா்களால் தங்கள் வாா்டுகளில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் தொடங்க முடியவில்லை. வரவிருக்கும் தோ்தல்களில் பொதுமக்களை எதிா்கொள்ள பயந்து, 15 கவுன்சிலா்கள் தங்கள் சொந்தக் கட்சியை உருவாக்க முடிவு செய்தனா்‘ என்று அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் ‘உள் சரிவுக்கு‘ பாஜகவைக் குறை கூறுவதற்குப் பதிலாக, அதன் தலைவா்கள் சுயப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா கூறினாா். முன்னதாக, மூன்று அமைச்சா்கள், 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலா்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. உள்பட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கேஜரிவால் கட்சியை ‘ஒருங்கிணைப்பு இல்லாமல்’ நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அதை ‘அழிவை’ நோக்கி இட்டுச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக வீரேந்திர சச்தேவா கூறினாா்.