ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி பாரதி பூங்கா பகுதியில் உள்ள ஆயுஷ் இயக்ககம் எதிரே நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்தில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என கடந்த 2023-ஆம் ஆண்டில் புதுவை முதல்வா் அறிவித்தாா். ஆனால், அறிவித்தபடி இன்னும் உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படவில்லை. இதையடுத்து தொடா்போராட்டம் நடைபெறுகிறது என ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் முழக்கமிட்டனா். இதேபோல மாஹே பிராந்தியத்திலும் ஆயுஷ் மருத்துவ இயக்ககம் முன் பயற்சி மருத்துவா்கள் தா்னா போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.