படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!
ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!
நடிகர் சந்தானம் தன் நண்பர் ஆர்யா குறித்து சுவாரஸ்யமாக பேசியது வைரலாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் சந்தானம், சிலம்பரசன், ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய சந்தானம், “படத்தின் தயாரிப்பாளரான ஆர்யா என் உயிர் நண்பன். ஒரு கல்லூரியின் கதை படத்தின் மூலம்தான் ஆர்யா பழக்கமானார். அப்படப்பிடிப்பில் பெங்களூருவிலிருந்து வந்த நடிகைகளிடம் என்னை ‘காமெடி சூப்பர்ஸ்டார்’ என அறிமுகப்படுத்தி வைத்தார். பதற்றமான என்னிடம் ஏதாவது நகைச்சுவை செய்து அவர்களைச் சிரிக்க வை எனச் சொன்னதுடன் என்னுடன் சேர்ந்து நகைச்சுவையும் செய்தார். தொடர்ந்து, சேட்டை படத்தில் எனக்கு காமெடி சூப்பர்ஸ்டார் எனப் பட்டம் கொடுத்து டைட்டில் கார்டில் போட்டார்.
அப்போது, நான் லிங்கா படப்பிடிப்பில் இருந்தேன். இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், ‘நீங்கதான் காமெடி சூப்பர்ஸ்டாரா?’ என்றார். நான் பதற்றத்தில், ‘இல்லை சார். ஆர்யாதான் அப்படி போட்டிருக்கார்’ என்றேன். ‘நீங்க சொல்லாமலா போட்டிருப்பார்?’ என ரஜினி சார் கேட்டார். இப்படி என்னை பல விஷயங்களில் மாட்டிவிட்டிருக்கிறார்.
அண்மையில் ஒரு சம்பவம் நடந்தது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தை முடித்தபின் நான் ஒரு பழைய வீட்டை வாங்கினேன். அங்கேயே குடியேறலாம் என முடிவு செய்ததால் என் அம்மாவும் மனைவியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வந்தனர். ஒருநாள் என்னைச் சந்திக்க வந்த ஆர்யா வீட்டைப் பார்த்து, ‘வீடு சரியில்ல. இடிச்சு புதுசா கட்டு’ என அவர் நண்பரை அழைத்து வீட்டை இடிக்கச் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை இடிக்க ஆரம்பித்தவர்கள் வியாழக்கிழமையன்று இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். வெள்ளிக்கிழமை விளக்கேற்றச் சென்ற என் அம்மாவும் மனைவியும் வீட்டைக் காணவில்லை என என்னை அழைத்தனர். நான் திட்டுவார்கள் என வீட்டை இடித்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்தேன். பின், ஆர்யா சொன்னால் சரியாக இருக்கும் அதனால்தான் வீட்டை இடித்தேன் என அம்மாவிடம் சொன்னேன்.
அதற்கு என் அம்மா, ‘ஏன்டா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவிலதான் இப்படியெல்லாம் பண்ணீங்க. இப்ப நிஜத்துலயும் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா” என்றார். அந்த அளவிற்கு நானும் ஆர்யாவும் நண்பர்கள். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிக்க: அடுத்தப்படம் இதுதான்: கார்த்திக் சுப்புராஜ்!