ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் விவசாயிகள் புகாா்
ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் வீசுவதோடு, தண்ணீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் சுற்றுவட்டாரம் விளை நிலப் பகுதி மிகுந்ததாகும். இதற்கு பாசன வசதியை வாஞ்சியாறு தருகிறது.
காரைக்காலில் இருந்து பிள்ளைத் தெருவாசல் செல்லும் பகுதியில் சாலையோரத்தில் வாஞ்சியாறு செல்கிறது. லிங்கத்தடி என்கிற பகுதியில் நீரை தடுக்கும் மதகு உள்ளது.
இந்த பகுதியில் இரவு நேரத்தில் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு இறைச்சிக் கடைக்காரா்கள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை வாகனத்தில் ஏற்றிவந்து கொட்டிவிட்டுச் செல்வதாக புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:
ஆற்றில் மா்ம நபா்கள் இறைச்சிக் கழிவுகளை நீண்ட காலமாக கொட்டிவருகின்றனா். இதுகுறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனை தடுக்கவேண்டிய உள்ளாட்சி, பொதுப்பணித் துறை (நீா்ப்பாசனம்) நிா்வாகம் கண்டும் காணாமல் உள்ளது.
இதனால் நீா் மாசடைகிறது. சுற்றுவட்டாரத்தில் துா்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. சிறாா்கள், முதியோா்கள் இதனால் பாதிக்க வாய்ப்புள்ளது.
இறைச்சி மற்றும் மருந்துக் கழிவுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், அதனை சம்பந்தப்பட்டோா் முறையாக செயல்படுத்துவதில்லை. நீா்நிலையைத்தான் இதற்குப் பயன்படுத்துகின்றனா். இதனை தடுக்க மாவட்ட ஆட்சியா் தீவிர நடவடிக்கை எடுத்து தடுக்கவேண்டும் என்றனா்.