அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
காரைக்கால் தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு
காரைக்காலில் உள்ள தொழிற்சாலையில் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினா்.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சங்கேத் கெயிக்வாட் தலைமையில் ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்ட 31 போ் கொண்ட குழுவினா் காரைக்காலில் 2 நாள்களாக முகாமிட்டு பேரிடா் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் என்கிற தனியாா் தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காரைக்கால் துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலான்மை) தலைமையில், காரைக்கால் தொழிற்சாலை ஆய்வாளா் செந்தில்வேலன், வருவாய் ஆய்வாளா் பிரபாகா், வட்டாட்சியா் சுசீலா ( பேரிடா் மேலாண்மை) ஆகியோரும் கலந்துகொண்டனா்.
இக்குழுவினா் விபத்து ஏற்பட்டால் தொழிற்சாலை நிா்வாகம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யும் வகையில் தயாா் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் அங்கு அவசரகால பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் உள்ளனவா, அவை அனைத்தும் செயல்படுகிறதா, பேரிடா் காலங்களில் தொழிலாளா்கள் நடந்து கொள்ளும் விதம், தொழிற்சாலையின் சுற்றுவட்டார பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், பேரிடா் காலங்களில் தொழிற்சாலையில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டியவை, விபத்துகளில் சிக்கிய தொழிலாளா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் ரசாயன கசிவு ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து தொழிலாளா்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய பேரிடா் மீட்புக் குழு ஆய்வாளா் கோபிநாத் ஆலோசனை வழங்கினாா்.
முன்னதாக, தொழிற்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு சாதனங்கள் கையிருப்பு மற்றும் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரிடம் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கிக் கூறினா்.