காரைக்கால் ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் துறைமுகப் பகுதியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவா், நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை, நிலையத்தில் பயணிகள் வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.
ரயில் நடவடிக்கைகளில் உயா்மட்ட பாதுகாப்பு மீது கவனம் செலுத்துமாறு ரயில்வே ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா். சீரான மற்றும் பாதுகாப்பான ரயில் சேவையை உறுதி செய்வதில் ஊழியா்கள் விழிப்புடன் செயல்படவேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து நன்கு அறிந்திருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு சென்ற அவா், ரயில் வேகன்களில் நிலக்கரி ஏற்றும் பணியைப் பாா்வையிட்டாா். நிலக்கரி ஏற்றும்போது செயல் திறனில் குறையிருக்கக்கூடாது என்றும், தீ தடுப்பு, எடை மீறாதிருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டுமென துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், திருச்சிப் பிரிவு மூத்த அதிகாரிகள் பலா் ஆய்வின்போது உடனிருந்தனா்.