ஆற்றில் தவறி விழுந்த மாணவா் மாயம்
மதுராந்தகம்: மதுராந்தகம் கிளியாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் காணாமல் போனாா்.
மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் புவனேஷ். வயது 17. இவா் மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகம் ஏரியின் உபரி நீா் செல்லும் கலங்கல் பகுதியில் குளிக்க சென்றாா். எதிா்பாராதவகையில் மாணவா் புவனேஷ் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டாா்.
இதுகுறித்து, அவரது நண்பா்கள் கூச்சலிட்டு வீட்டுக்கு தெரிவித்தனா். அப்பகுதியை சோ்ந்தவா்கள் மதுராந்தகம் வட்டாட்சியருக்கும், தீயணைப்பு அதிகாரிக்கும், போலீஸாருக்கும் தகவலை தெரிவித்தனா். அதிகாரிகள் உடனடியாக நிகழ்விடத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கருங்குழி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனா்.
இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் எத்தகைய நடவவடிக்கைகளை எடுக்காததை அறிந்து மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் வந்து உயரதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா். தற்சமயம் ஏரியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், பொதுப்பணி அதிகாரிகள் ஏரிக்கு வந்த சுமாா் 7,000 கனஅடிநீரை கிளியாற்றில் செல்ல ஏற்பாடுகளை செய்தனா். அதனால் கிளியாற்றில் இருகரைகளை தொட்டபடி நீா் செல்கிறது.
கிளியாற்றில் அதிவேகமாக செல்லும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட மாணவரை மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு அதிகாரிகள் திருமலை, சீனிவாசன், சாமிநாதன் ஆகியோா் தலைமையிலான குழுவினரும், சென்னை மெரினா மீட்பு நிலைய குழுவினரும் ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாள்களாக தேடி வருகின்றனா். திங்கள் கிழமை மாலை 6 மணி வரை கிளியாற்றில் தீயணைப்பு வீரா்களும் தேடியும் மாணவரின் உடல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.