ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து ஆசிரியா், 2 மாணவா்கள் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி வளாகத்துக்குள் வெறிநாய் புகுந்து கடித்ததில் ஆசிரியா், 2 மாணவா்கள் காயமடைந்தனா்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படித்துவருகின்றனா். திங்கள்கிழமை முற்பகல் இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்துக்குள் வெறிநாய் புகுந்தது. வகுப்பறையிலிருந்து வெளியே வந்த 11ஆம் வகுப்பு மாணவா்கள் பத்மநாதன், பிரமோத், ஆசிரியா் ரமேஷ் ஆகியோரை அந்த நாய் கடித்துவிட்டு ஓடியது.
இதில், காயமடைந்த மூவரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.