ஆளுநருக்கு எதிரான வழக்கில் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திய உச்ச நீதிமன்றம்! தீர்ப்பு முழு விவரம்!!
புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்தும் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஒரு ஆளுநரின் அதிகாரம் என்பது என்ன? அவர் எப்படி செயல்பட வேண்டும்? எதை, எத்தனை காலத்துக்குள் செய்ய வேண்டும்? என்பதை வரையறுத்திருப்பதோடு, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தையும் பயன்படுத்தி, நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023 ஆகிய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான உண்மையில் 12 சட்டத்திருத்த மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதனை ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதும், 12 மசோதாக்களில் இரண்டை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துவிட்டு, 10 மசோதாக்களை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு உடனடியாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பியிருந்தது. இந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி, உடனடியாக குடியரசுத்தலைவர் பரிசீலனைக்கு அனுப்பினார். அதில் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 7 மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு, மற்ற 2 மசோதாக்கள் கிடப்பில் வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேலும் சில கேள்விகளுக்கும் இந்த தீர்ப்பில் பதிலளித்துள்ளது.
தீர்ப்புக்காக பரிசீலிக்கப்பட்ட கேள்விகள்
1. ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை உள்ளதா அல்லது சட்டப்பிரிவு 200-இன் கீழ் அவரது செயல்பாடுகள், மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டதா?
2. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 இல் 'முடிந்தவரை விரைவில்' என்ற சொற்றொடரின் அளவுகோல் என்ன?
3. சட்டப்பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் முடிவு மீது நீதித்துறை மறுஆய்வு எடுக்க முடியுமா? என்பதற்கும் தீர்ப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதிகள், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீண்டகாலமாக சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஆளுநரின் பணி அமைதியை நிலைநாட்டுவது. ஆனால், இங்கே அதற்கு எதிர்மாறாக உள்ளது என நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பினை வாசிக்கும்போது குறிப்பிட்டார்.
ஆளுநர் முன் உள்ள மூன்று வாய்ப்புகள்
ஒப்புதலுக்காக தன்னிடம் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள்தான் உள்ளன.
1. ஒப்புதல் அளிக்கலாம்.
மசோதா கிடைக்கப்பெற்றதும், அதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
2. திருப்பி அனுப்பலாம்
மசோதாவை முற்றிலும் அல்லது பகுதியாக மறுபரிசீலனை செய்யுமாறு கூறி திருப்பி அனுப்பலாம். ஆனால், ஒரு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநர் நிராகரிக்க முடியாது.
3. குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்
மாநில பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் மாற்றங்கள் செய்யாத நிலையில் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கக் கூடாது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஒன்றே ஆளுநருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
வீட்டோ அதிகாரம் இல்லை
அதாவது, குடியரசுத் தலைவருக்கு இருப்பது போல, மசோதாக்களை கிடப்பில் வைப்பது அல்லது நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மசோதா மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இருக்க முடியாது. அவருக்குள்ள 3 வாய்ப்புகளில் ஒன்றைத்தான் பின்பற்ற வேண்டும்.
பஞ்சாப் ஆளுநர் வழக்கு
ஆளுநர்கள் மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கக் கூடாது என்று பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்ததையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அறிவுரை
மாநில ஆளுநர் என்பவர் அரசியல் பின்புலங்களால் வழிநடத்தப்படாமல், ஆளும் அரசுக்கு ஒரு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக செயல்பட வேண்டும்.
பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆளுநர் முன்னோடியாக இருக்க வேண்டும், விரைவாக செயல்படுபவராக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது.
அரசியல்சாசன மதிப்பை ஆளுநர் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
அரசியல்சாசனத்தின் வழிகாட்டுதல்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மிகப்பெரிய அரசியலமைப்பு அலுவலகத்தில் ஆளுநர் பதவியை தாங்கள் வகித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆளுநராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின்படியே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.
ஆளுநர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து, தங்களது நடவடிக்கைகள் அரசியலமைப்பு விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் மற்றும் மாநிலத்தின் கலாசாரத்தை பின்பற்றி வாழும், மக்களின் விருப்பங்களையும் எதிரொலிப்பதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்
அரசமைப்புச் சட்டப்பிரிவு 200ன் கீழ், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக நிலுவையில் வைத்திருப்பதாக இருந்தால் 1 மாத காலத்துக்குள்.
2. திருத்தம் மேற்கொள்ள மாநில அரசுக்கு அறிவுறுத்தி, திருப்பி அனுப்பப்படுவதாக இருந்தால் மூன்று மாதங்கள்.
3. மாநில அரசின் ஆலோசனை பெறுவதற்கு மாறாக, குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.
4. பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்காக மசோதாவை திருப்பி அனுப்புவதாக இருந்தால் ஒரு மாத காலம்.
இந்த காலக்கெடுவின்படி, ஆளுநர் செயல்படாவிட்டால், மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாததால், காலவரையறை இல்லாமல், ஒரு மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைக்கலாம் என்பது அர்த்தமாகாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.
ஒப்புதல் தர காலக்கெடு
ஒரு மாநில ஆளுநர், அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். ஒரு மாநிலத்தின் தலைவர் பதவியில் ஆளுநர் இருந்தாலும், மாநில அரசின் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே தனது அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும்.
குறிப்பாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் நிராகரிக்க வழியில்லை, மாநில அமைச்சரவை அளிக்கும் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்பிரிவு 200-ன் கீழ், தவறானது, சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டனர்.
சிறப்பு அதிகாரம்
ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை கையிலெடுத்துள்ளது. அதன்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட தேதியில் இருந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும் என்றும், இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.
நிறைவாக...
நீதிபதி பர்திவாலா, தனது தீர்ப்பின் உரையை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர். அம்பேத்கரின் கூற்றை மேற்கோள்காட்டி நிறைவு செய்தார். அதில் "அரசியலமைப்புச் சட்டமானது நல்லதாகவே இருக்கலாம், ஆனால், அதனை நிறைவேற்றுபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், சட்டமும் தவறாக இருப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும்".
இதையும் படிக்க.. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என்ன?