ஆஸ்திரியாவில் ஆட்சியமைக்க வலதுசாரிக் கட்சிக்கு அழைப்பு
வியன்னா: ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க தீவிர வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சிக்கு அதிபா் அலெக்ஸாண்டல் வேண்டொ் பெலன் அழைப்பு விடுத்துள்ளாா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு அத்தகைய கட்சியொன்றுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
கடந்த செம்படரில் நடைபெற்ற தோ்தலில் சுதந்திரக் கட்சி 28.8 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தாலும், புதிய அரசை அமைக்க தற்போதைய பிரதமா் பிரதமா் காா்ல் நெஹமா் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அதிபா் அழைப்பு விடுத்தாா். இருந்தாலும், கூட்டணியை உருவாக்க முடியாததால் பதவி விலகுவதாக நெஹமா் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து ஆட்சியமைக்க தற்போது சுதந்திரக் கட்சித் தலைவா் ஹொ்பா்ட் கிக்கலுக்கு அதிபா் அழைப்பு விடுத்துள்ளாா்.