ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு ஆஸ்திரேலிய கடல்முனைப் பகுதியான அல்பேனிக்கு 2,069 கி.மீ. தென்மேற்கே, 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த மையம் தெரிவித்தது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவிலோ, அன்டாா்டிகாவிலோ சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் எல்லைக்குள் ஆஸ்திரேலியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.