சென்னையில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!
இசைப் போராட்டம்: இசை பிடிக்காத தாலிபான்; ஆப்கானில் மௌனமான குரல்கள் - சுதந்திரம் பாடும் இளைஞர்கள்!
போர், குண்டுவெடிப்பு, உள்நாட்டுக் கலவரம், தாலிபான்கள் இது தான் ஆப்கானிஸ்தான் என்றதும் நம் மனதில் தோன்றுபவை. இந்த நாட்டின் வரலாறு முழுக்க அமைதியற்ற காலங்கள் தான்.
ஆனால், ஒரு காலத்தில் ‘ஆசியாவின் பாரிஸ்’ என்று புகழப்பட்டது இந்த நாடு. இப்போது இந்த நாட்டில் இசை மௌனமாக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு, அரசியல் காரணங்களுக்காக, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தமது படைகளைத் திரும்ப பெற்றுக்கொண்டது. அதன் பின், ஆட்சிக்கு வந்த தாலிபான்களுக்கு ஏனோ இசையைக் கண்டாலே பிடிப்பதில்லை.

ஏன்?
தாலிபன்களைப் பொறுத்தவரை, இசை மனிதர்களைப் பாவத்திற்கு இட்டுச் செல்லும். அதனால், இசை, குறிப்பாக வாத்தியக் கருவிகள், பெண்களின் பாடல்கள், மேலைநாட்டுப் பாணிகள் ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன.
இசை மக்களுக்குச் சுதந்திர உணர்வு, படைப்பாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனையைத் தருவதாக தாலிபன்கள் கருதுகின்றனர்.
தாலிபானின் முக்கிய இலக்கு சமூகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால், நசீத் (மதப் பாடல்கள்) பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்தப் பாடல்கள் வாத்தியக் கருவிகள் இல்லாமல், குரலால் மட்டுமே பாடப்படுகின்றன.
இதற்கு அவர்கள் கூறும் காரணம், மதத்திற்குப் பயன்படுத்தப்படும் தூய குரல் இசை என்பதால், இதற்கு எந்தத் தடையும் இல்லை. இதை தவிர, தாலிபன்கள் இசையைத் தங்கள் ஆட்சிக்கு அபாயமாகக் கருதுகின்றனர்.
ஆசியாவின் பாரிஸ்!
ஆப்கானிஸ்தான் இந்தியா, பாரசீகம் மற்றும் துர்கிஸ்தான் சந்திக்கும் நாடு.
இதனால், இந்துஸ்தானி சங்கீதம், பாரசீக மெல்லிசை மற்றும் துர்கிஸ்தான் தாளங்கள் கலந்து, தனித்துவமான இசை ஆப்கானிஸ்தானில் உருவானது.
பாரம்பரியக் கருவிகளான ரூபாப் (ஆப்கானிஸ்தானின் தேசிய இசைக் கருவி), தப்லா, ஹார்மோனியம், சர்நாய் ஆகியவற்றின் இசை ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஓங்கி ஒலிக்கும்.
அதனால், 1950 முதல் 1970 வரை ஆப்கானிஸ்தானை 'ஆசியாவின் பாரிஸ்' என்றே அழைத்தனர்.

ரேடியோ காபூலில் புதிய குரல்கள் மற்றும் பாப் இசைக் கலந்த பாடல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆப்கான் இசைக் கலைஞர்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தனர்.
1970-களில் அகமத் ஜஹாங்கீர் மிகவும் பிரபலமான குரலாக விளங்கினார். இவர் 'ஆப்கானி எல்விஸ்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
1996 முதல் 2001 வரை நடந்த தாலிபன் ஆட்சியில் இசை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் இசை மௌனமாக்கப்பட்டுள்ளது.
இசையால் சுதந்திரம் தேடும் ஆப்கானிய இளைஞர்கள்
2021-ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியவுடன், அங்கிருந்து தப்பியோடியவர்களில் பலர், இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் தேசிய இசைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அஹ்மத் சர்மஸ்த் கூறுகையில், “தாலிபன்கள் எங்களை அமைதியாக்க நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் நேற்றைவிட, இன்று அதிக பலத்துடனும் சத்தத்துடனும் வெளிவருவோம்” என்கிறார்.
ஆப்கானிஸ்தான் தேசிய இசைக் கல்வி நிறுவனம் 2010-ல் அமெரிக்காவின் ஆதரவுடன் காபூலில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மாற்றத்திற்கான அடையாளமாகத் திகழ்ந்தது. இளைஞர்களும் பெண்களும் ஒன்றாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் பெண்கள் இசைக் குழு இங்கிருந்தே தொடங்கப்பட்டது.
அவர்கள் ஆப்கானிய இசை மற்றும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பத் தொடங்கினர். இது மனித உரிமைகளுக்கும் பெண்களின் சுதந்திரத்திற்கும் அடித்தளமாகக் கருதப்பட்டது. ஆனால், 2021-ல் இவை அனைத்தும் இருளால் சூழப்பட்டன.

போர்ச்சுகலின் உதவிகரம்
இவர்கள் தங்களது இசையைக் காக்க, பல நாடுகளின் கதவைத் தட்ட, போர்ச்சுகல் மட்டும் கை நீட்டியுள்ளது. இப்போது இந்த இசைக் கழகம் போர்ச்சுகல் பிராகாவில் செயல்பட்டு வருகிறது.
கோவிட் சமயத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலர் இங்கு சென்று சேர்ந்துள்ளனர். வந்தவர்களில் பலர் 18 வயதுக்குக் கீழ் இருந்தவர்கள்.
அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு இசைக்காகச் சென்றிருக்கின்றனர். புதிய நாடு, புதிய மொழி, புதிய உணவு வகைகள் ஆகியவற்றுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், இப்போது, இசை வழியாகத் தங்கள் சமூக அடையாளத்தைத் தக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இசைக்குழுக்கள்
ஆப்கான் தேசிய இசைக் கல்வி நிறுவனம் உருவாக்கிய இசைக் குழுக்கள் ஆப்கான் யூத் ஆர்கெஸ்ட்ரா மற்றும் ஸோஹ்ரா ஆர்கெஸ்ட்ரா ஆகும்.
அயர்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களுக்குச் சென்று, இந்தக் குழுக்கள் தங்கள் இசை மூலம் தங்கள் நாட்டின் சுதந்திரத்தையும் பெண்களின் உரிமைகளையும் வெளிப்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பல கலைஞர்கள், தற்போது வெளிநாடுகளில் தங்கள் இசையைத் தொடர்ந்து வருகிறார்கள். 'ஒரு நாள் ஆப்கானிஸ்தானில் அவர்களது சொந்த இசை ஒலிக்கும்' என்கிற நம்பிக்கையில்.