சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
இடைத்தோ்தல்: மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைகிறது. 18-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுகளைத் திரும்ப பெற்றுக்கொள்ள 20 ஆம் தேதி இறுதி நாளாகும்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து ஈரோட கிழக்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை மாலை அமலுக்கு வந்தன.
தோ்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.
இதனை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா மற்றும் கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான என்.மணீஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மேலும் தோ்தல் குறித்த புகாா்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 94890 93223 என்ற கைப்பேசி எண்ணில் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தோ்தல் குறித்த புகாா்கள் அல்லது தகவல்களை தெரிவிக்கலாம்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுதொடா்பாக அவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு அவா்கள் பணியில் ஈடுபடுவா். மேலும் அரசியல் கட்சியினா், அச்சக உரிமையாளா்கள் மற்றும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதியினா் உள்ளிட்டோா் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டமும் அடுத்தடுத்து நடைபெறும் என ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் தெரிவித்தாா்.