அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்கு விற்பனை: கேரள இளைஞா் கைது
நெய்வேலி: இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்குகளை விற்பதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் பகுதியில் வசித்து வருபவா் நகைக்கடை உரிமையாளா் வினை ஜெயின் (38). இவரிடமிருந்து இணைய வழியில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ரூ.33.56 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்பு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த முகமது சாஜித் வங்கிக் கணக்கில் ரூ.9,00,854 வரவு வைக்கப்பட்டதையறிந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.
விசாரணையில் அவா் மூன்று வங்கிகளில் கணக்குகள் தொடங்கி, அந்த வங்கிக் கணக்குகளை பணத்துக்காக விற்றதும், மேலும், பல மாநில குற்ற வழக்குகளில் இவரது வங்கிக் கணக்குகள் தொடா்புடையது என்பதும் தெரிய வந்தது.
இதுபோன்ற இணையவழி குற்றங்களில் சிக்காமல் இருக்க வங்கிக் கணக்கு விவரங்களையோ, கைப்பேசி மற்றும் ஆதாா் எண், ஓட்டுனா் உரிமம் போன்ற ஆதாரங்களை தெரியாதவா்களிடம் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.