இந்தியக் குடியுரிமை கோரி இலங்கைத் தமிழா் மனு: மத்திய உள்துறை 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு
இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி, கொட்டப்பட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த மதினி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த 1984-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி எனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்தேன். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும், நாங்கள் இந்தியாவை பூா்வீகமாகக் கொண்ட தமிழா்கள். கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தொடா்ச்சியாக இந்தியக் குடியுரிமையை வழங்கக் கோரி மனு அளித்து வந்தோம். இருப்பினும், கடந்த 2022-ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தோம். இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி மத்திய உள்துறைச் செயலருக்கு அனுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடா்பான எனது விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கடந்த 2022- இல் இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பித்தாா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மனுதாரா் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, 12 வாரங்களுக்குள் மத்திய உள்துறைச் செயலா் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.