தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தனியாா் வங்கி சாா்பில் குளிா்சாதன வசதியுள்ள ரயில் பெட்டியில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் மத்தியில் இத்திட்டத்துக்கு உள்ள வரவேற்புக்கு ஏற்ப பிற ரயில்களில் இந்த சேவையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
சில இடங்களில் ‘சிக்னல்’ பிரச்னை காரணமாக ஏடிஎம் இயந்திரம் இயங்கவில்லை. சுரங்கப் பாதை வழியாக செல்லும்போது ஏடிஎம்-மை பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது. மற்றபடி ஏடிஎம்-மில் எந்த பிரச்னையும் எழவில்லை. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியுடன் இணைந்து இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக அந்த பெட்டியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இப்போது ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் கூறினா்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் - நாசிக் அருகேயுள்ள மனாமத் சந்திப்பு இடையே 258 கி.மீ. தொலைவுக்கு தினசரி இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 4.35 மணி நேரங்களாகும். ரயில்வேயின் இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.