9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்தியாவுக்கு நாடுகடத்தல் : மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் மனு அமெரிக்காவில் தள்ளுபடி
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக படகில் வந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இரவோடு இரவாக நடந்த இத்தாக்குதல் இரண்டு நாட்களுக்கும் மேல் நீடித்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை மட்டும் உயிரோடு பிடித்தனர். அஜ்மல் கசாப் என்ற அத்தீவிரவாதி விசாரணைக்கு பிறகு தூக்கிலிடப்பட்டான். இத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இறந்துவிட்டாலும் இத்தாக்குதலுக்கு காரணமான மற்றும் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். இத்தாக்குதலில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணா என்பவன் இப்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அவனை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகள் பலனலிக்கவில்லை. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து பேசியபோது ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ராணா எந்நேரமும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே ராணா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், `தான் பாகிஸ்தான் முஸ்லிம் என்பதால் என்னை இந்தியாவில் கடுமையாக சித்ரவதை செய்யும் அபாயம் இருக்கிறது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் என்னை இந்தியாவில் அதிக அளவில் சித்ரவதை செய்யக்கூடும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதோடு தனக்கு சிறுநீரக கோளாறு, கேன்சர், இருதய பிரச்னை என பல்வேறு மருத்துவ பிரச்னைகள் இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதிக்கப்படாவிட்டால், எந்த ஒரு மேல் முறையீடும் இருக்காது. மேலும் அமெரிக்க நீதிமன்றங்கள் அதிகார வரம்பை இழக்கும். தான் விரைவில் இறந்துவிடுவேன்' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவனது வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்தியாவுக்கு நாடுகடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் ராணாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது.
மும்பை தாக்குதல் சதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டேவிட் ஹட்லியுடன் சேர்ந்து ராணா சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாக்டரான ராணா பாகிஸ்தான் ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொண்டு கனடாவிற்கு சென்றுவிட்டார். ராணா இந்தியாவுக்கு எந்நேரமும் நாடு கடத்தப்படலாம். ராணா கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.