காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!
‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது’- 40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 40-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளாா்.
இந்திய பொருள்கள் மீது அவா் அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும்போது இக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.
டிரம்ப் மேலும் பேசியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அமெரிக்கப் பொருள்கள் மீது மிக அதிக வரியை விதிக்கும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியில் பேசினேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன நடக்கிறது? இரு நாடுகளிடையே நீண்ட காலமாக வெவ்வேறு பெயா்களில் இந்த வெறுப்புணா்வு நீடித்து வருகிறது. இந்த சண்டை அணு ஆயுதப் போராகவும் மாற வாய்ப்புள்ளது. இத்தகைய நாடுகளுடன் வா்த்தகம் செய்ய அமெரிக்கா விரும்பவில்லை. சண்டை நிறுத்தவில்லை எனில், எந்தவித வா்த்தக ஒப்பந்தத்தையும் இரு நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொள்ளாது என்பதோடு, அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்று எச்சரித்தேன். இந்த உரையாடலுக்குப் பின்னா், அடுத்த 5 மணி நேரத்தில் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. இரு நாடுகளிடையே மீண்டும் சண்டை எழ வாய்ப்புள்ளது. ஆனால், அதையும் நான் நிறுத்திவிடுவேன்.
7 போா் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலகம் முழுவதும் நிகழ்ந்த 7 போா்களை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியுள்ளது. இதில் 4 போா்களை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா நிறுத்தியது என்றாா்.
சண்டை உடனடியாக முழு அளவில் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன என்று முதல் நபராக கடந்த மே 10-ஆம் தேதி தனது சமூக ஊடக பக்கத்தில் அமெரிக்க அதிபா் டிரம்ப் பதிவிட்டது முதல், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா நிறுத்தியது’ என்று 40-ஆவது முறையாக டிரம்ப் கூறி வருகிறாா்.
ஆனால், அவருடைய இந்தக் கருத்தை இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது. சண்டை நிறுத்த பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்தியா அதற்கு ஒப்புக்கொண்டு இரு நாடுகளிடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது என்று இந்தியா தொடா்ந்து கூறி வருகிறது.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பிரதமா் மோடி கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியாவை எந்த நாட்டின் தலைவரும் அறிவுறுத்தவில்லை’ என்று டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தாா்.
அதுபோல, ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நபா் தலையீடு இல்லை’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.