இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்
பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய மாநில முதல்வர்கள் உள்பட பலரும், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, ``பாகிஸ்தான் மீது இந்தியாவின் தாக்குதல் குறித்து அறிந்தேன். இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே, தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் ஆலோசித்து வருகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தாலும், பாகிஸ்தானில் 3 பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.