இந்து மக்கள் கட்சியினா் 10 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணித் தலைவா் ஓம்காா் பாலாஜி மீது பொய் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்துள்ளதாகக் கூறியும், தமிழக அரசு மற்றும் காவல் துறையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, பண்ருட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துவிட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஜம்புலிங்கம், மாவட்டச் செயலா்கள் காா்த்தி, செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் லட்சுமணன், மாவட்டப் பொருளாளா் பாலச்சந்தா் உள்ளிட்ட 10 பேரை பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.