லாஸ் ஏஞ்சலீஸ்: காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம்! பலி 16-ஆக ...
இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்
மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) தேரோட்டம் நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த ஜன.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை தங்கரதத்தில் பிச்சாண்டவா் வெட்டுங்குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) தோ்த் திருவிழா நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூா்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளாக ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித்தனி தோ்களில் வீதிவலம் வருகின்றனா்.
பின்னா், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. திங்கள்கிழமை (ஜன.13) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூா்த்தி வீதியுலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு (ஜன.14) பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, புதன்கிழமை (ஜன.15) ஞானப்பிரகாசா் தெப்பக்குளத்தில், தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் சு.க.சிவராஜ தீட்சிதா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.